ARTICLE

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் அமைந்துள்ள பழங்கால தொன்மையும் சிறப்பும் வாய்ந்த திருத்தலம் தான் இந்த சிவந்தியப்பர் திருக்கோவில்.

sivanthiyappar Temple, Vickramasingapuram


முந்தைய காலத்தில் சிவந்தியப்பர் என்ற குறுநில மன்னர் இந்த பகுதியை ஆண்டு வந்தார். மிகச்சிறந்த சிவபக்தரான அவர் மக்களின் நலனுக்காக ஓர் சிவன் கோவிலை அமைத்தார். மன்னர் பெயராலே இங்குள்ள மூலவரின் பெயரும் சிவந்தியப்பர் என்றானது.
அம்பாளின் திருநாமம் வழியடிமை கொண்ட நாயகி.

தலவிருட்சம் வில்வமரம். தெற்கு நோக்கி அம்பாள் காட்சித்தருவதால் திருக்கோவில் மிக்க பிரசித்தி பெற்று விளங்குகின்றது. மேலும் பிரகாரத்தில் உள்ள முருகர் ஆறுமுகநயினார் என அழைக்கப்படுகிறார்.

முருகப்பெருமானுக்கு அருகில் வள்ளி தெய்வானை இருவரும் அவர்களுக்குள் நேருக்கு நேர் பார்ப்பது போல் அமைந்திருப்பது தனிச்சிறப்பு ! இது வேறு எங்கும் இல்லாத சிறப்பம்சம் !

இங்குள்ள தட்சிணாமூர்த்தி பெருமான் தனது இடது கையை காலுக்கு கீழிலிருக்கும் நாகத்தின் தலை மீது வைத்திருப்பது போன்று காட்சித்தருவது மிகவும் சிறப்புமிக்க தனித்துவமான அமைப்பாகும்.

sivanthiyappar Temple, Vickramasingapuram



சித்திரை,புரட்டாசி,ஐப்பசிமாதத்தில் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும்.
பிரதோஷ வழிபாடு சோமவார வழிபாடு ஆருத்ரா தரிசனம் மார்கழி மாத பூஜைகள் என அனைத்தும் சிறப்பாக நடைபெறும் !

பாபநாச கோவில் திருவிழாக்கள் அனைத்தும் இங்கு நடைபெறும் ! பாபநாசமும் விக்கிரமசிங்கபுரமும் ஒரே ஊராக அருகே அமைந்துள்ளது !

பாபநாசநாதர் போன்றே சிவந்தியப்பரும் சிறப்பு வாய்ந்தவராக காணப்படுகின்றார் ! சித்திரை மாத விசு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது ! பாபநாசத்தில் கொடியேறியது முதல் இங்கும் விழாக்கோலம் தான் ! 

பாபநாசம் சிவன் கோவில், வி.கே.புரம் கிருஷ்ணர் கோவில் மற்றும் மூன்றுலாம்ப் முருகன் கோவில் என அனைத்து கோவில்களின் சப்பரமும் இவரை காணது செல்வதில்லை ! 

கிருஷ்ணர் ஜெயந்தி விழாவை முன்னிட்டும் தமிழர் வீர கலைகளான உரிஅடித்தலும் வழுக்கு மரம் ஏறுதலும் மக்களின் ஆர்ப்பரிக்கும் கூட்டத்தில் சிறப்பாக நடைபெறுகிறது ! 

திருக்கல்யாண காட்சிகளும் ! அபிசேக காட்சிகளும் மெய்சிலிர்க்கும் வகையில் நடைபெறுகின்றன ! 

சிவந்தியப்பர் அழகை காணவே நம் இரு கண்களும் போதாது ! ஆயிரம் கண்கள் வேண்டும் ! 

மாதப்பிறப்பு அன்று சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. சிவராத்திரி அன்று பெருமளவில் மக்கள் தரிசிக்க பல ஊர்களில் இருந்து வருகின்றனர் ! ஆருத்ரா தரிசனம் அன்றும் அதிகாலை முதலே பக்தர்கள் அதிகம் பேர் கோவிலை சூழ்ந்து விடுவார்கள் ! சிங்கை மக்களின் வேந்தனாக முடிசூடிய மன்னனாக அரசாளும் சக்ரவர்த்தியாக சிவந்தியப்பர் அருள் மழை பொழிகின்றார் ! 

திருநெல்வேலியிலிருந்து பாபநாசம் வரும் வழியில் நெல்லையிலிருந்து சுமார் 47 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில் ! விக்கிரமசிங்கபுரம் மூன்றுலாம்ப் ஸ்டாப்ல் இறங்கி  அருகில் வந்தால் திருக்கோவிலின் தேர் ரத வீதியை அடையலாம் ! ரத வீதியின் திசை எங்கிலும் திருக்கோவிலின் கோபுரம் அறியலாம் ! 

சிங்கை நகர்வாழ் மக்களை அன்புடனும் அரவணைப்புடனும் தாயுள்ளத்தோடும் காத்து இரட்சிக்கின்றார் சிங்கை அரசாளும் எம்பெருமான் சிவந்தியப்பர் ! 




நற்றுணையாவது நமச்சிவாயவே ! 

Sivanthiyappar Tample Vickramasingapuram, Tirunelveli , Sivanthiyappar Kovil, V.K.Puram

Post a Comment

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் !

Previous Post Next Post